தமிழ்சினிமாவில் தமக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் நடிகர்களை விட நடிகைகளே பெரும்பாடுபடுவார்கள். நிலைமை இவ்வாறிருக்கையில், 10வருடங்களாக தென்னிந்திய சினிமாத்துறையில் நாயகியாகவே வளைய வந்துகொண்டிருக்கிறார் "சாமி"யின் மாமி த்ரிஷா.

                              தமிழ் சினிமாவில் விக்ரமின் சாமி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்த நடிகை த்ரிஷா 30வயதையும் கடந்த நிலையில் இன்றும் முன்னணி நடிகையாக, கைவசம் பல படங்களை வைத்துக் கொண்டு கதாநாயகியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக புதுவரவு நடிகைகளுடன் போட்டி போடுகின்றார் என்றால் தப்பில்லை.இந்தநிலையில் த்ரிஷாவின் திருமணம் பற்றிய கிசுகிசு திரையுலகில் மீண்டும் எழுந்திருக்கிறது.
 
                              
                                   முன்னர் தெலுங்கு திரையுலகின் முன்னணிநடிகர் ராணாவுடன் காதல் என்றும், அவரையே திருமணம் செய்யப்போவதாகவும் கதைகள் உலா வந்தமை தெரிந்ததே. அத்தோடு த்ரிஷாவின்அம்மா உமா கிருஷ்ணன் த்ரிஷாவிற்கு பொருத்தமான நல்ல மணமகனை தேடுவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

                              
                                          இது இவ்வாறிருக்க, தற்போது பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை நம்ம "சாமி"யின் மாமி கரம்பற்றவுள்ளாராம் என செய்திகள் கசிகின்றன. மாமி கைப்பிடிக்கும் இந்த வருண் மணியன் பிரபல தொழிலதிபர் என்பது மட்டுமல்லாமல் ஒரு சினிமா தயாரிப்பாளரும் கூட என கோடம்பாக்கத் தகவல்கள் சொல்கின்றன.  

                         "வாயை மூடி பேசவும்" படத்தின் தயாரிப்பாளரான இந்த வருண் மணியன்,  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவரவிருக்கும் "காவியத்தலைவன்" படத்தின் தயாரிப்பாளர்களில்  ஒருவர் என்றும், இன்னும் பல படங்களை தயாரிக்கவிருக்கிறார் எனவும் தெரியவருகின்றது.  

                              
  த்ரிஷாவும், வருண் மணியனும் சினிமாத்துறையில் இருக்கும் நிலையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  இருவரும் சந்தித்துக்கொண்டார்களாம். அப்போதே தமது எதிர்காலம் பற்றி முடிவெடுத்துக்கொண்டதாகவும் கிசுகிசு வெளியாகியுள்ளது.        

 "இதுதானா...? இதுதானா...?" என சாமியின் மாமி த்ரிஷா எதிர்பார்க்கும் அந்நாள் வருமா...? இல்லை இதுவும் கனவாகுமா......? காத்திருப்போம்.

*கணேசமூர்த்தி ராகவன்.

0 comments:

Post a Comment

 
Top
Blogger Template